அதிமுக கொறடா நியமன விவகாரம் – சபாநாயகரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மனு
சென்னை, 14 மே (ஹி.ச.) அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே, பெருமான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டப்பேரவை
அதிமுக கொறடா நியமன விவகாரம் – சபாநாயகரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மனு


சென்னை, 14 மே (ஹி.ச.)

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடையே, பெருமான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக கட்சிக்குள் பெறும் குழப்பம் வெடித்தது.

இதனிடையே, சி.வி.சண்முகம் தரப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த திருத்தணி கே.அரியின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக கட்சியின் சட்டமன்றக் கொறடா நியமனம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.பி.பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் உள்ளிட்ட எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

சட்டமன்றத்தில் எந்த அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதோ, அந்த அடிப்படையிலேயே கொறடா நியமனம் செய்யப்பட வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் கொறடா பதவி கடந்த சில மாதங்களாக காலியாக உள்ள நிலையில், அதற்கான நியமனம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று இரு தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவுக்கு பிறகு, சட்டமன்றத்தில் கொறடா யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இபிஎஸ் அணி மற்றும் எஸ்.பி.வேலுமணி அணி என இரு தரப்பும் தங்களுக்கே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகின்றன.

இந்த சூழலில் சபாநாயகரின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

சபாநாயகர் ஜே.சி.பி.பிரபாகர் மனுவை பரிசீலித்து, சட்ட விதிகளின்படி உரிய முடிவு எடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக கொறடா நியமன விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b