நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை - அதிமுகவில் மோதல் தீவிரம்
சென்னை, 14 மே (ஹி.ச.) தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 22 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென
Cv


சென்னை, 14 மே (ஹி.ச.)

தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 22 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி சட்டமன்றக் குழுத் தலைவராகவும், என்னை கொறடாவாகவும் நியமித்தோம்.

அதனைத் தொடர்ந்து நம்பிக்கை தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

47 எம்.எல்.ஏக்களில் 25 பேர் கொறடா உத்தரவை ஏற்று நடந்தனர்.

ஆனால் 22 பேர் அதனை மீறினர். எனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம் என்றும் கூறினார்.

மேலும், “சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையாக யார் ஆதரவு பெற்றுள்ளனர் என்பதே முக்கியம். அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி,

கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு எடுக்கப்படும் நீக்க நடவடிக்கைகள் செல்லாது. எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவும் சட்டபூர்வமானதல்ல” என்றார்.

தோல்விக்கான காரணங்களை ஆராய பொதுக்குழுவை கூட்ட வேண்டிய நிலையில், அனைவரையும் நீக்கும் நடவடிக்கையிலேயே அவர் ஈடுபட்டுள்ளார்.

கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றும் தெரிவித்தார்.

நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், “சட்டமன்ற அமைப்பு வேறு, கட்சி அமைப்பு வேறு. எங்களை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை.

அவர் பலரை நீக்கிய பழக்கத்தில் இருக்கிறார். போகிற போக்கில் அவரே அவரை நீக்கிக் கொள்வார் போல இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “அவரால் நீக்கப்பட்ட பலர் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரத்தில் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்” என்றும் குற்றம்சாட்டினார்.

ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்றது தொடர்பான கேள்விக்கு,

அவர்கள் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ