அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இபிஎஸ் அவசர ஆலோசனை
சென்னை, 14 மே (ஹி.ச.) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது சென்னை இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனையில் ஆர்.பி. உதயகுமார், இன
Eps


சென்னை, 14 மே (ஹி.ச.)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது சென்னை இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலோசனையில் ஆர்.பி. உதயகுமார், இன்பதுரை, தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களிடம் அதிகாரப்பூர்வ புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையகம் தரப்பில் தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாகவும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் கட்சியில் அதிரடி மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், எம். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக 17 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற வாக்கெடுப்பை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள், கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ