Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 14 மே (ஹி.ச.)
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகளும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ (வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை) அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த முறை, தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.
பிரதமர் மோதீ சமீபத்தில் மக்களிடம் உரையாற்றியபோது, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், எரிபொருள் சேமிப்பில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், சாத்தியமான இடங்களில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை பின்பற்றலாம் என்றும் கூறினார்.இதையடுத்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் பதிலளித்தார்.
அரசு துறைகளில் தேவையான பிரிவுகளில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறை அதிகரிக்கும் என்றும், அதற்கேற்ப நிர்வாக அமைப்புகளும் மாற வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிகாரிகள் தேவையற்ற பயணங்களை குறைத்து, டெலி கான்பரன்ஸ் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய துறைகள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய ஊழியர்கள் குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிலருக்கு முழுமையான ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ மற்றும் சிலருக்கு ‘ஹைபிரிட்’ முறை (சில நாட்கள் வீடு, சில நாட்கள் அலுவலகம்) அமல்படுத்தும் வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன.
இந்த திட்டம் குறித்து விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தெளிவான வழிகாட்டுதல்களுடன் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA