Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 14 மே (ஹி.ச.)
ஆந்திர பிரதேசத்தில் ஆக்வா விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இறால் தீவன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் வேத்பிரகாஷ் கோயல் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறால் தீவன விலை உயர்வால் ஆக்வா விவசாயிகளின் முதலீட்டு செலவு அதிகரித்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு டன் தீவனத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் இறால் வளர்ப்பை கைவிடும் அபாயம் உருவாகும் என்றும், அதன் தாக்கம் மாநில ஏற்றுமதியிலும் பிரதிபலிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக இறால் தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சோயாபீன் மீல் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீவன விலைகளை தொடர்ந்து கண்காணிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்துள்ளார்.
ஆக்வா விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA