Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணை தலைவராக செயல்பட்டு வந்த ஸ்ரீதர் (34), ஆரணி டவுன் வி.டி.எஸ் பகுதியை சேர்ந்தவர். ஆரணி காந்தி ரோட்டில் வசித்து வரும் ராஜ்குமார் – கௌசல்யா தம்பதியினருடன் இவருக்கு முன்பே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு காய்கறி சந்தையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய கௌசல்யாவை வழிமறித்து, ஸ்ரீதர் ஆபாசமாக பேசி தன்னை ஏற்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கௌசல்யா தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் ஸ்ரீதரை எச்சரித்து அனுப்பியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று கௌசல்யா வீட்டில் தனியாக இருந்தபோது, ஸ்ரீதர் வீட்டிற்குள் புகுந்து கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த கௌசல்யா கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
பொதுமக்கள் வருவதை கண்டு தப்பியோட முயன்ற ஸ்ரீதரை சுற்றிவளைத்து பிடித்த மக்கள் தர்மஅடி கொடுத்து தமிழ்நாடு காவல்துறையின் ஆரணி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கௌசல்யா அளித்த புகாரின் பேரில், ஸ்ரீதர் மீது கற்பழிப்பு முயற்சி மற்றும் பெண்மீது ஆபாச சைகை காட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam