தங்கம்-வெள்ளி இறக்குமதி வரி உயர்வு ஏன்? மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி, 14 மே (ஹி.ச.) அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா அதிகளவில் டாலர்களை செலவிட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி
T


புதுடெல்லி, 14 மே (ஹி.ச.)

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக இந்தியா அதிகளவில் டாலர்களை செலவிட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கும், தங்கத் தேவைகளுக்கும் பெருமளவில் இறக்குமதியையே நம்பி உள்ளது.

குறிப்பாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அன்னிய செலாவணி கையிருப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனை சமாளிக்கும் வகையில், அத்தியாவசியமற்ற இறக்குமதியாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் 72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.89 லட்சம் கோடியாகும். இந்த அதிகளவான தங்க இறக்குமதி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை கணிசமாக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை குறைப்பதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இந்த வரி உயர்வு உதவும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் டாலருக்கான தேவையை குறைத்து, ரூபாயின் மதிப்பை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பொதுமக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA