சிறையில் இருந்து தப்பியோடிய கைதி -கள்ளக்காதலி வைத்து பிடித்த போலீசார்!
சென்னை, 14 மே (ஹி.ச.) சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கஞ்சா
Chennai


சென்னை, 14 மே (ஹி.ச.)

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் (வயது 19).

சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மே 11ஆம் தேதி அதிகாலை காசிமேடு பல்லவன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த அபிஷேக்கை தனிப்படை போலீசார் பிடித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கை விலங்குடன் அமர வைக்கப்பட்டிருந்த அபிஷேக் போலீசார் அசந்த நேரத்தில் கை விலங்குடன் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

அபிஷேக் அங்கிருந்து விம்கோ நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்குச் சென்று அவரிடமிருந்து செல்போன் ஒன்றை வாங்கிக் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு பேருந்து மூலம் தப்பிச் சென்றார்.

தலைமறைவான ரவுடியை பிடிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி ரவுடி தனது நண்பரின் செல்போனை எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

அந்த செல்போன் எண்ணை வைத்து ரவுடியை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அபிஷேக் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த பெண்ணின் மூலம் அபிஷேக்கை தொடர்பு கொள்ள வைத்த போலீசார், உடனடியாக அவரை சென்னைக்கு திரும்பி வருமாறு அழைக்க வைத்தனர்.

காதலி மீது இருந்த நம்பிக்கையில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அபிஷேக் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அப்போது, அபிஷேக் வருவதை அறிந்து அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த தனிப்படை போலீசார், பேருந்தை விட்டு இறங்கிய அபிஷேக்கை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தப்பி ஓடிய ரவுடியை மீண்டும் பிடித்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN