Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகச் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மொத்தம் 17 புதிய கால்நடை காப்பகங்கள் கட்டும் பணி திட்டமிடப்பட்டு, தற்போது அதில் 10 காப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ள 7 கால்நடை காப்பகங்களின் கட்டுமானப் பணிகளும் தற்போது போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலைகளில் திரிவதைத் தவிர்க்கும் வகையில், இரண்டு இடங்களில் பிரம்மாண்டமான நவீன காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
வீரபாண்டி கட்டபொம்மன் குறுக்குத் தெருவில் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய காப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில், சுமார் ரூபாய் 2.56 கோடி மதிப்பீட்டில் மற்றொரு நவீன கால்நடை காப்பகம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையின் மூலம் சாலை விபத்துகள் குறையும் என்றும், பிடிபடும் மாடுகள் முறையாகப் பராமரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிகளை விரைந்து முடித்து, மீதமுள்ள காப்பகங்களையும் விரைவில் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam