அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்றால் காவல் நிலையம் முற்றுகை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ் அதிரடி
கோயம்புத்தூர், 14 மே (ஹி.ச) கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களை திரட்டி காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என அதிரடியாக தெரிவித்
Vigne


கோயம்புத்தூர், 14 மே (ஹி.ச)

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களை திரட்டி காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு தொகுதியில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விக்னேஷ் வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொதுமக்களிடம் பேசிய விக்னேஷ், குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக கிணத்துக்கடவை மாற்றுவேன். தொகுதிக்காக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட என் சொந்த தேவைக்காக பயன்படுத்த மாட்டேன்” என்று உறுதியளித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்தன்மை கொண்டது போல, கிணத்துக்கடவு தொகுதியையும் அனைத்து வசதிகளும் கொண்ட சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

மது மற்றும் போதைப்பொருள் இல்லாத தொகுதியாக கிணத்துக்கடவை மாற்றுவது தான் தனது இலக்கு என்றும், தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களை திரட்டி காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என்றும் எச்சரித்தார்.

மேலும், நீண்டகாலமாக பிரச்னையாக இருந்து வரும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரத்திற்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ