Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. 60 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இருப்பினும், மு.க.ஸ்டாலின் தனது தொகுதியில் தோல்வியடைந்தார். அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
மறுபுறம், துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், எதிர்க்கட்சியாக செயல்படும் அணுகுமுறை மற்றும் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சி தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P