Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 14 மே (ஹி.ச.)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முக்கிய வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு பின் ஆலன் மற்றும் அஜிங்க்ய ரஹானே தொடக்கம் கொடுத்தனர். பின் ஆலன் 18 ரன்களிலும், ரஹானே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கிரீன் 32 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரகுவன்ஷி 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அவருடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்த நிலையில், இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரின் இறுதி பந்தில் ரகுவன்ஷி 71 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ரிங்கு சிங் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணியின் சார்பில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சலாம் தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல் மற்றும் விராட் கோலி தொடக்கம் கொடுத்தனர். ஜேக்கப் பெத்தேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் தேவ்தத் படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். படிக்கல் 39 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த ரஜத் படிதார் 11 ரன்களிலும், டிம் டேவிட் 2 ரன்களிலும் வெளியேறினர். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் விராட் கோலி 105 ரன்களுடனும், ஜிதேஷ் சர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் சார்பில் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA