ஜூன் 2 முதல் ஜமாபந்தி தொடக்கம் - தூத்துக்குடி ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
தூத்துக்குடி, 14 மே (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) வரும் 02.06.2026 முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். இது குறித்து விரிவான அட்டவணை
Jamabandi to Begin on June 2


தூத்துக்குடி, 14 மே (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) வரும் 02.06.2026 முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

இது குறித்து விரிவான அட்டவணையை அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஒவ்வொரு தாலுகாவிலும் காலை 10.00 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறும். திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

இதற்கான வருவாய் தீர்வாய அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார். இதன்படி, ஏரல் வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும், கயத்தார் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலரும் ஜூன் 2 முதல் முறையே 11 மற்றும் 12-ஆம் தேதி வரை தலைமை தாங்குகின்றனர்.

திருச்செந்தூர் வட்டத்திற்குத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ) மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்திற்குத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ஆகியோர் ஜமாபந்தி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தூத்துக்குடி வட்டத்திற்குத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள்) அவர்களும், விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி வட்டங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவைச் சேர்ந்த தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (I மற்றும் II) ஜூன் 2 முதல் ஜூன் 9 மற்றும் 12-ஆம் தேதிகள் வரை கணக்குகளைத் தணிக்கை செய்து மனுக்களைப் பெறுகின்றனர்.

எட்டையாபுரம் வட்டத்திற்குச் சார் ஆட்சியரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களுக்கு முறையே தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்களும் தீர்வாய அலுவலர்களாகச் செயல்பட உள்ளனர்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை, அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b