Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 14 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூழ்கிய படகில் தத்தளித்த 15 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் துணிச்சலுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மீட்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் உட்பட மொத்தம் 15 மீனவர்கள், கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து “குஞ்சச்சன்” என்ற விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
கடந்த 6 நாட்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர்கள், இன்று அதிகாலை மீன்பிடியை முடித்து மீண்டும் கொல்லம் துறைமுகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குளச்சல் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த விசைப்படகின் அடிப்பகுதி திடீரென உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் படகு மெதுவாக கடலில் மூழ்க தொடங்கிய நிலையில், அதிலிருந்த 15 மீனவர்களும் உயிர் பிழைக்க போராடியுள்ளனர்.
இதையடுத்து உதவி கோரி சைகை காட்டிய மீனவர்களை கவனித்த முட்டம் பகுதியை சேர்ந்த “கிறிஸ்துராஜா” என்ற விசைப்படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் முதலில் லைப் ஜாக்கெட்டுகளை வழங்கி, பின்னர் கடலில் குதிக்க வைத்த மீனவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட 15 பேரும் பின்னர் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் பழுதடைந்த விசைப்படகு கடலில் முழுவதுமாக மூழ்கும் காட்சிகளும், தத்தளித்த மீனவர்களை மற்றொரு படகில் இருந்தவர்கள் மீட்கும் அதிரடி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam