“கருப்பு” திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது ஈவிபி பிலிம் சிட்டி புகார்
சென்னை, 14 மே (ஹி.ச.) நடிகர் சூர்யா நடிப்பில், ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரீன் வாரியர் பிக்சர்ஸ் மீது ஈவிபி பிலிம் சிட்டி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. சென்னை பூந்தமல்ல
கருப்பு


சென்னை, 14 மே (ஹி.ச.)

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரீன் வாரியர் பிக்சர்ஸ் மீது ஈவிபி பிலிம் சிட்டி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டி பகுதியில் “கருப்பு” திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக படப்பிடிப்பு தளம், செட் அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு சுமார் ரூ.18 லட்சம் வரை செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.5 லட்சம் மட்டும் முன்பணமாக வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் தொகையை கடந்த 5 முதல் 6 மாதங்களாக வழங்காமல் தயாரிப்பு நிறுவனம் இழுத்தடித்து வருவதாக ஈவிபி பிலிம் சிட்டி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சூழலில், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்காக ஈவிபி பிலிம் சிட்டி நிர்வாகம் நேற்று முதல் சென்னையில் உள்ள கிரீன்வாரியர் அலுவலகத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பணம் வழங்கப்படாததால், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், “படப்பிடிப்புக்கான முழுத் தொகையை வழங்காமல் நிறுவன மேலாளர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

திரைப்படம் வெளியான பிறகு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. எனவே நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், கிரீன்வாரியர் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam