கேரளம் முதல்-மந்திரியாக வி.டி. சதீசன் தேர்வு -10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைப்பு
திருவனந்தபுரம், 14 மே (ஹி.ச.) கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந
K


திருவனந்தபுரம், 14 மே (ஹி.ச.)

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த தேர்தல் வெற்றி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கட்சியினரிடையே அதிருப்தி நிலவியது.

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி., முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இவர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தொண்டர்கள் தனித்தனியாக பேரணிகள் நடத்தினர்.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பிறகு, வி.டி. சதீசன் கேரளத்தின் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA