Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 14 மே (ஹி.ச.)
கேரளம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாட்கள் கடந்தும் முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசன் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே 3 தலைவர்களின் ஆதரவாளர்களும் தனித்தனியாக பேரணிகள் நடத்தி, பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்றும், பேனர்கள் மற்றும் பேரணிகள் நடத்த வேண்டாம் என்றும் காங்கிரஸ் மேலிடம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் கோழிக்கோடு நகரின் காரச்சேரி பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வைத்திருந்த பெரிய பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில், “கே.சி.வேணுகோபால் உங்களுக்கு விருப்பமான நபராக இருக்கலாம்.
ஆனால் அவரை கேரள மக்கள் முதல்-மந்திரியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் வயநாட்டுக்கு வர வேண்டாம். இப்படியான நடவடிக்கைகளால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோல் வயநாடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகிலும் மற்றொரு பேனர் வைக்கப்பட்டது. அதில், “கே.சி.வேணுகோபாலை முதல்-மந்திரியாக தேர்வு செய்தால் கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்” என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
கேரளத்தின் அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இறுதி முடிவை ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இணைந்து அறிவிப்பார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA