Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 14 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவரான முத்துமணி, 3 கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது கணவர் மூலம் குழந்தை பெற்றுகொள்ள விரும்புவதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனைவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,
என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்ள என் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 நாள் சாதாரண பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன்.
என் மனுவை சிறை கண்காணிப்பாளர் கடந்தாண்டு செப்டம்பர் 11 அன்று நிராகரித்துவிட்டார்.
அந்த உத்தரவை ரத்து செய்து என் கணவருக்கு 21 நாள் பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதிகள் என். ஆனந்த்வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தண்டனை கைதியுடன் சேர்ந்து மனுதாரர் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் கைதிக்கு விடுப்பு கோரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், இந்தக் காரணம் தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளுக்குள் வருகிறதா? எனக் கேட்டதற்கு, விதியின் கீழ் வரவில்லை எனக் கூறப்பட்டது.
இருப்பினும், தண்டனை பெற்றவர் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான மனுதாரரின் உரிமையை கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 226-ஆவது பிரிவின் கீழ், தனது அதிகார வரம்பை பயன்படுத்தி தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில்,
தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் வழங்கப்படும் விடுப்பை ஒரு உரிமையாகக் கோர முடியாது.
அது தண்டனை பெற்றவருக்கு வழங்கப்பட்ட ஒரு சிறப்புரிமை மட்டுமே. தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், தண்டனை பெற்றவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரரும் தண்டனை பெற்றவரும் குழந்தையின் பிறப்புரிமையை புறக்கணிக்கின்றனர்.
குழந்தை இவ்வுலகுக்கு வரும்போது, 3 கொலை என்ற கொடூரமான குற்றத்தை செய்து, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதியின் குழந்தை என்ற களங்கத்துடனேயே வளரும். வாழ்நாள் முழுவதும் அந்த களங்கத்தை சுமக்கவேண்டி இருக்கும்.
நீதிமன்றம் யதார்த்தங்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
எனவே, நீதிமன்றம் இந்த உலகில் பிறந்து வாழ்நாள் முழுவதும் களங்கத்தை சுமக்கவிருக்கும் குழந்தையின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது.
மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால், எந்த தவறும் செய்யாத குழந்தை வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தை சுமக்கும்.
இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவில் தவறேதும் இல்லை.
அதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்று கூறி நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
Hindusthan Samachar / ANANDHAN