கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னை, 14 மே (ஹி.ச.) சட்டப்பேரவையில் நேற்று (மே 13 ஆம் தேதி) நடைபெற்ற விவாதத்தின் போது, முந்தைய அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்து இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்
Magalir Urimai Thogai


சென்னை, 14 மே (ஹி.ச.)

சட்டப்பேரவையில் நேற்று

(மே 13 ஆம் தேதி) நடைபெற்ற விவாதத்தின் போது, முந்தைய அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்து இருந்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் எந்தத் திட்டமும் நிறுத்தப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (மே 14 ஆம் தேதி) உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

இதன் மூலம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் வழக்கம்போல தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதை அரசு செயல்பாட்டிலேயே நிரூபித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், மாணவர்கள் பயன்பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கல்விச்செலவில் பெரும் ஆதரவாக இருந்து வருகின்றன.

முதலமைச்சர் விஜய் நேற்று சட்டப்பேரவையில், “முந்தைய அரசுகள் கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடரும். மக்கள் நலனுக்கான எந்தத் திட்டமும் பாதிக்கப்படாது” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த நாளே மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவித் தொகை வரவு வைக்கப்பட்டிருப்பது, அரசின் உறுதியான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

இதனால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

ஆட்சி மாற்றத்தால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய அரசின் பயனுள்ள திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு வெறும் வார்த்தையாக இல்லாமல், உடனடி நடவடிக்கையாக அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும்.

ஆனால் தேர்தல் காரணமாக 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000, கோடை கால ஊக்கத்தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 முன்கூட்டியே வரவு வைத்தார் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தற்போது மே மாதத்துக்கான ஊக்கத்தொகை எப்போது வரும் என்று எதிர்பார்த்த நிலையில்,விரைவில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 தான் வரவு வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

தவெக தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது முதல் வைக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருகிறார்.

மகளிர் உரிமைத்தொகையை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய காலஅவகாசம் தேவைப்படுகிறது.

முதலில் பழைய நடைமுறையான ரூ.1,000 தொகை வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்ட பின், வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து தவெக வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / ANANDHAN