மக்கள் நலன், மாநில உரிமைகளுக்கான பயணம் தொடரும் - தோழமை கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம்
சென்னை, 14 மே (ஹி.ச.) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியறிவிப்பு அறிக்கை வெளியிட
முதலமைச்சர் பிரச்சாரம்


சென்னை, 14 மே (ஹி.ச.)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியறிவிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

2019 முதல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் தொடர்ந்து இணைந்து செயல்பட்ட கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்து மாநில நலனுக்கான குரலை வலுப்படுத்தியதையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார். தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மட்டுமின்றி, போட்டியிடாமல் இருந்தும் முழுமையான ஆதரவு வழங்கிய இயக்கங்கள் மற்றும் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தேர்தல் பணிகளில் வழங்கிய ஒத்துழைப்புக்காக மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துள்ளார்.

அதேபோல், கி.வீரமணி, கமல்ஹாசன் உள்ளிட்ட தேர்தல் களம் காணாத நிலையிலும் தி.மு.க. கூட்டணிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தலைவர்களையும் அவர் பாராட்டியுள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடு மற்றும் பரப்புரைப் பணிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்கசப்புகளுக்கு தானே பொறுப்பேற்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், அதற்கான வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்றாலும், 1 கோடியே 54 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் மற்றும் 72 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருப்பது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வுடன் தொடர்ந்து பயணிப்பதாக அறிவித்திருப்பது கொள்கை உறுதியின் அடையாளம் என்றும், மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைக்காக எதிர்காலத்திலும் இணைந்து செயல்படுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P