Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 14 மே (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய தொழிற்சாலைகளில் இருந்து மீண்டும் சட்டவிரோதமாக கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றின் நீர் சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் அதிக வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர்கள் சாக்கடை கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டு, அவை நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு புற்றுநோய், தோல் நோய்கள், ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மை, குடல் மற்றும் வயிறு தொடர்பான பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
“எந்த ஆட்சி வந்தாலும் பள்ளிபாளையம் மக்களின் நிலை மாறவில்லை” என பொதுமக்கள் கதறுகின்றனர்.
கடந்த 15 நாட்களாக காவிரி ஆற்றில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று பள்ளிபாளையம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, “இனிமேல் கழிவுநீர்கள் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படும்” என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அதிகாரிகளின் ஆய்வுக்கு அடுத்த நாளே, பள்ளிபாளையம் ஒன்பதாம் படி பகுதியில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயில் இருந்து அதிக வேதிப்பொருட்கள் கலந்த சாயத் தொழிற்சாலை கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்ததாக கூறப்படுகிறது.
இதனால் காவிரி நீர் மீண்டும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
“நீங்கள் என்ன உத்தரவு போட்டாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற திமிர் போக்கில் சில தொழிற்சாலைகள் செயல்படுகின்றன என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகள் வெறும் எச்சரிக்கையாக மட்டுமே இருந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாய தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, காவிரி ஆற்றை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam