புதுக்கோட்டை அதிமுக அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - விஜயபாஸ்கர், பழனிவேலு ஆதரவாளர்கள் மோதல் அச்சம்
புதுக்கோட்டை, 14 மே (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய்
Police


புதுக்கோட்டை, 14 மே (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியது.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் 15-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பொறுப்புகளை நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

அவருக்கு பதிலாக தொழிலதிபரும், வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளருமான பழனிவேலு புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிவேலு இன்று புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் திரண்டனர்.

இதையடுத்து அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், மாவட்ட அதிமுக அலுவலக நுழைவாயில் பூட்டப்பட்டதுடன், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் புதுக்கோட்டை அதிமுக அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ