Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது ஆயிரம் ரூபாய் குறைத்து வழங்கப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அனைத்திற்கும் விஜய் அவகாசம் தேட ஆரம்பிப்பார்.
ஆக்சிடென்டாக முதலமைச்சராக வந்தவர் என்பதால் அவரிடமிருந்து இப்படிப்பட்ட பதில்கள்தான் வரும்” என்று விமர்சித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் ஒரு விஷயத்தை பேசினால் உடனடியாக முதலமைச்சரோ அல்லது சட்டப்பேரவை தலைவரோ பதில் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை பின்னால் வெளியிடுகிறார்கள். முன்னுக்கு பின்னாக விஜயின் அரசு போய்க்கொண்டுள்ளது.
விஜய்க்கு தெளிவு இல்லை; ஆட்சி என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர் தெளிவான முடிவுக்கு வர வேண்டும்” என தெரிவித்தார்.
“தூய்மையான அரசியல் செய்வேன் என்று கூறி விஜய் அரசியலுக்கு வந்தார். ஆனால் ஆரம்பத்திலேயே தூய்மையற்ற நிலைக்கு அரசு சென்று விட்டது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் பகிரங்கமாக சொல்லிவிட்டு செல்வோம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. திமுகவுடன் அதிமுகவினர் பேசியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்” என்றார்.
மேலும் சி.வி.சண்முகம் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “சில பேருக்கு பதவி இல்லாமல் இருக்க முடியாது; அதில் முதல் நபர் சி.வி.சண்முகம். சிலர் இறந்தால் ‘இயற்கை எய்தினார்’ என்று எழுதுவார்கள்.
சிலர் இறந்தால் ‘சிவலோகப் பதவி அடைந்தார்’ என்று எழுதுவார்கள்; அதனை விரும்பும் பட்டியலில் முதல் நபர் சி.வி.சண்முகம்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
டாஸ்மாக் கடைகள் தொடர்பாகவும் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.
புதுத் தொடப்பம் கொஞ்சம் வேகமாகத்தான் பெருக்கும்” என்றார்.
இறுதியாக, “கடந்த ஐந்து நாட்களாக அரசு முறையாக செயல்படவில்லை” என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam