Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 14 மே (ஹி.ச.)
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் ரூ.10 வசூலிக்கும் நடைமுறை தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கடுமையாக விமர்சித்திருந்தார் தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் தீவிரமாக முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கும் சூழலிலும், பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் தொடர்வதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதேபோன்ற புகார் எழுந்ததை அடுத்து, திருப்பாலைக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஆட்சி இப்போது தான் மாறியுள்ளது.
ஆனால் வாங்கி பழகிய அதிகாரிகள் இன்னும் மாறவில்லை. அதனால் தான் வசூல் செய்கிறோம்” என டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் தேவிபட்டினம் பகுதியில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையிலும் “ரூ.10 வாங்குவது வழக்கமானதே” என ஊழியர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரெகுநாதபுரம் செல்லும் வழியில் உள்ள மதுக்கடையிலும் கூடுதல் வசூல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam