ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி, 14 மே (ஹி.ச.) 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் க
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்சி, 14 மே (ஹி.ச.)

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த மே 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே 16 ஆம்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், யாளி வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதனை தொடர்ந்து சித்திரை தேரோட்டமான இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

சரியாக காலை 6.15 மணிக்கு, கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா என்ற பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கத் தொடங்கினர்.

பிரம்மாண்டமான திருத்தேர், மலர்கள், வண்ணத் துணிகள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்போர் கண்களைக் கவர்ந்தது. தேரோடும் நான்கு உத்திர வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்திருந்தன.

தேர் நிலைக்கு வந்ததும், இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்திருவிழா வரும் 11 நாட்களுக்கு நடைபெற்று, சித்திரை தெப்பத் திருவிழாவுடன் நிறைவடையும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b