ரோஜா மலர்களால் பறவைகள் அலங்காரம்- ஊட்டியில் இன்று ரோஜா கண்காட்சி தொடக்கம்
நீலகிரி, 14 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவி வரும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க தமிழகம் மற்
O


நீலகிரி, 14 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவி வரும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.

ஊட்டியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 21-வது ரோஜா கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

கண்காட்சியை முன்னிட்டு 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய ரோஜா செடிகளும் தனி பிரிவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான ரோஜா கண்காட்சியில் “பறவைகளை பாதுகாப்போம்” என்ற கருத்தை மையமாக கொண்டு, பல வண்ண ரோஜா மலர்களால் அன்னப்பறவை, ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி, தூக்கனாங்குருவி, கழுகு, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அலங்காரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், கண்காட்சியை மேலும் சில நாட்கள் நீட்டிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரோஜா கண்காட்சியை தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA