Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மாநில கவுன்சில் சார்பாக தமிழ்நாடு உயர்கல்வி உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு, தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது.
இதில் நான்கு அமர்வுகளின் வாயிலாக ஏஐ-ன் உலகளாவிய தாக்கம், தொழில்-கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பின் அவசியம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் சூழல் குறித்து நிபுணர்கள் விரிவாக விவாதித்தனர்.
தொடக்க விழாவில், சென்னைக்கான பிரிட்டிஷ் துணை தூதர் டாக்டர் சுதாபா சௌத்ரி மற்றும்சென்னைக்கான இலங்கை துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பம்சமாக, சிறப்பான பங்களிப்பை வழங்கிய 3 கல்வி நிறுவனங்களுக்கு 'தொழில்துறை ஒத்துழைப்பு விருதுகள்' வழங்கப்பட்டன.
மாநாட்டின்,நிறைவு விழாவில் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, தலைவர், ஃபிக்கி தமிழ்நாடு மாநில கவுன்சில் மற்றும் சி.எம்.டி, ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் &: நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் குழுமம்.
டாக்டர் அசோக் ஜி. வர்க்கீஸ், இணைத் தலைவர், ஃபிக்கி தமிழ்நாடு மாநில கவுன்சில் மற்றும் புரோ-சான்சலர், ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம்.
பூபேஷ் நாகராஜன், இணைத் தலைவர், ஃபிக்கி தமிழ்நாடு மாநில கவுன்சில் மற்றும் சி.எம்.டி, இந்திரா குழும நிறுவனங்கள்.
டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன், துணைத் தூதர், இலங்கை துணைத் தூதரகம், சென்னை.
ஆகியோர்கள் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விருதுகள் பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:
(1) ஃபிக்கி தொழில்துறை ஒத்துழைப்பு விருது – உலகளாவிய விமானப் போக்குவரத்து பயிற்சி தரத்தில் சிறந்து விளங்குதல்:
ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (ஹெச்ஐடிஎஸ்) &: ஓரியண்ட் ஃபிளைட்ஸ் பிரைவேட் லிமிடெட். சர்வதேச தரத்திலான விமான சிமுலேஷன் பயிற்சியை இந்தியாவிற்கு கொண்டு வந்ததற்காக வழங்கப்பட்டது.
ஓரியண்ட் ஃபிளைட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஏபெல் மேத்யூ பிரசாத் விருதைப் பெற்றார்.
(2) ஃபிக்கி தொழில்துறை ஒத்துழைப்பு விருது – வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்:
ஐஐடி மெட்ராஸ் (ஐ ஐ டி மெட்ராஸ்). ஏஆர் , விஆர் மற்றும் எம்ஆர் துறைகளில் 'எக்ஸ்ஐடிசி' மையம் மூலம் மேற்கொண்ட கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது.
ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பிரபா மண்டயம் விருதைப் பெற்றார்.
(3) ஃபிக்கி தொழில்துறை ஒத்துழைப்பு விருது – குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குதல்: ஐஐடி மெட்ராஸ் &:ஐபிஎம்
ஐபிஎம் குவாண்டம் நெட்வொர்க் மூலமாக அடுத்த தலைமுறை கணினி தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
ஐபிஎம் நிறுவன மேலாளர் டாக்டர் தினகரன் விநாயகம் விருதைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய,டாக்டர் அசோக் ஜார்ஜ் வர்க்கீஸ்:
உயர்கல்வியின் எதிர்காலத்தை பழைய மாடல்களை வைத்து உருவாக்க முடியாது.
நாம் ஏ ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பொறியியல் திறமை மற்றும் உற்பத்தித் தளத்தைக் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்தியாவின் அறிவு மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு வெறும் பட்டங்கள் மட்டும் போதாது, டிஜிட்டல் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மை அவசியம்.
இதற்கு பல்கலைக்கழகங்களும் தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். வெறும் வேலைக்காக மட்டுமல்லாமல், மாணவர்களைத் தலைவர்களாக மாற்றும் வகையில் நமது வளாகங்கள் அமைய வேண்டும், என்றார்.
டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு பேசியதாவது,
உயர்கல்வித் துறை மிக வேகமாக மாறி வருகிறது. பாடத்திட்டங்கள் நிலையானதாக இருக்க முடியாது.
ஏ ஐ , ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
அரசாங்கம், தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும் போது தான் புதுமையான கண்டுபிடிப்புகள் பெருகும்.
மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் அவசியம் என்றார்.
டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் பேசியதாவது,
வணக்கம், ஏஐ மற்றும் தொழில்முறை 4.0 போன்ற மிக முக்கியமான தலைப்பில் இந்த மாநாட்டை நடத்திய ஃபிக்கிக்கு எனது வாழ்த்துகள். உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
அதற்கேற்ப நமது கல்வி நிறுவனங்கள் மாற்றமடைய வேண்டும்.
தொழில்நுட்பத்தில் இந்தியா இன்று உலகிற்கே ஒரு 'இன்ஜின்' போலச் செயல்படுகிறது, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் சிறப்பாக உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இன்னும் ஆழமான உறவை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்காக எங்களது துணைத் தூதரகம் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது,என்றார்.
இந்நிகழ்வில்,தொழில்துறை தலைவர்கள்,விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார்
300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA