அவசர கதியில் மதுக்கடைகள் கணக்கெடுப்பு - பணியாளர்கள் பாதிப்பு ஏற்படும் என டாஸ்மாக் சங்கம் கவலை
சென்னை, 14 மே (ஹி.ச.) தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூர எல்லைக்குள் உள்ள மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்ட நிலையில், கடை
Tasmac Protest


சென்னை, 14 மே (ஹி.ச.)

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தூர எல்லைக்குள் உள்ள மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்ட நிலையில், கடைகள் கணக்கெடுப்பில் குளறுபடிகள் உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் த. தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் 4,765 டாஸ்மாக் கடைகளில் 717 கடைகள் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடைகள் மூடுவதற்கான பட்டியல் அவசர கதியில் தயாரிக்கப்பட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 600 மீட்டருக்கு அப்பால் உள்ள கடைகளும் மூடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் இருந்து கடைகளின் தூரத்தை அளவிடும் போது, சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர் பிரதிநிதியையும் உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தவறாக கணக்கிடப்பட்ட கடைகளை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் 124 கடைகளில் 63 கடைகள் மூடப்படும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அங்கு 61 கடைகள் மட்டுமே செயல்படும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சட்டவிரோத மதுபான விற்பனைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, மூடப்படும் மதுபானக் கடைகள் பட்டியலை மறுஆய்வு செய்து குளறுபடிகளை சரிசெய்த பிறகே இறுதி பட்டியலை வெளியிட்டு கடைகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ