Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 மே (ஹி.ச)
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழக காவல்துறையில் அதிரடி நிர்வாக மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று அஸ்ரா கார்க் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று உளவுத்துறையில் டிஜிபி முதல் எஸ்பி வரை 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, வேலூர் சரக டிஐஜியாக இருந்த அதிகாரி பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண், மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை சரக டிஐஜியாக இருந்த சரவணன், உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கராட் கருண் உத்தவராவ், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த மயில்வாகனன், உளவுத்துறை எஸ்பி (1) ஆகவும், தூத்துக்குடி காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த மதன், உளவுத்துறை எஸ்பி (1) ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், கியூ பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகம், உளவுத்துறை எஸ்பி (2) ஆகவும், சிபிசிஐடி எஸ்பியாக இருந்த மாதவன், உளவுத்துறை எஸ்பி (2) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறை உதவி ஐஜியாக இருந்த சிலம்பரசன், சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, மாநில சைபர் குற்றப்பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ