Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் விஜய நாராயணன் அரசியலமைப்புச் சட்டம், வணிகவியல் வழக்குகள் மற்றும் பொதுநல வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
இதற்கு முன்பு 2017 முதல் 2021 வரை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.
தலைமை வழக்கறிஞர் என்பவர் மாநில அரசின் முதன்மை சட்ட ஆலோசகர் ஆவார்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அரசு தொடர்பான முக்கிய வழக்குகளில் அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவது, சட்டரீதியான கருத்துகளை அரசுக்கு வழங்குவது ஆகியவை இவரது முக்கியப் பொறுப்புகளாகும்.
புதிய தலைமை வழக்கறிஞர் விரைவில் பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும், நிலுவையில் உள்ள முக்கிய அரசு வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய நாராயணனின் நியமனத்திற்கு சட்டத்துறை வட்டாரங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b