Enter your Email Address to subscribe to our newsletters

வடலூர், 15 மே (ஹி.ச)
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திய மர்ம நபர்கள் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 113 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் என மொத்தமாக சுமார் ரூ.80 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும், அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள வேலாயுதத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வீடு நீண்ட நாட்களாக பூட்டி இருப்பதை நோட்டமிட்டு, திட்டமிட்டு இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மேலும், வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b