Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் செல்லாது என கழக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் கழக தலைமை நிலைய செயலாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சாதாரண அரசியல் இயக்கம் மட்டும் அல்ல.
கோடிக்கணக்கான தொண்டர்களின் வியர்வை, உழைப்பு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் அர்ப்பணிப்பால் உருவான உருக்குலையாத எஃகு கோட்டை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தனிப்பட்ட சுயலாபம், பதவி வெறி மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகளால் சிலர் கட்சியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்க முயற்சிக்கின்றனர்.
ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களின் உணர்வுகளை நசுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மே 5ஆம் தேதி பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, “தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு தன்னிச்சையான மற்றும் சுயநலமான முடிவுகளே காரணம்” என்று தெரிவித்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்த அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தோல்விக்கான காரணங்களை கட்சித் தொண்டர்களிடம் வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், திமுகவுடன் எந்த சூழலிலும் கூட்டணி அமைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் செல்லாது என்றும், அவர்கள் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்கிறார்கள் என்றும் கூட்டறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சிப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P