Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் சமீபத்திய அறிக்கைக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சியின் தற்போதைய நிலை மற்றும் தேர்தல் தோல்வி குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல் இப்படியான அறிக்கை வெளியிட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார உழைப்பை யாரும் மறுக்கவில்லை என்றாலும், கூட்டணி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் தொடர்பாக யாரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், தலைமை கூறியதை தம்பிகளாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் அனைவரையும் அழைத்து பேசி கருத்துக்களை கேட்க வேண்டியது அவசியம் என்றும், அதற்கு பதிலாக “நான் மட்டுமே எல்லாம்” என்ற அணுகுமுறையிலேயே தொடர்ந்து செயல்படுவது உணர்வுள்ள தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் விமர்சித்துள்ளார்.
கழகத்தின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் மனநிலையையே தாங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு அரசியல் அறநெறியின் அடிப்படையில் ஆதரவு வழங்கியுள்ளதாகவும், யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது கட்சியை பிளக்கவோ எந்த எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போதும் நீங்கள் அழைத்தால் பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து தீர்மானிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அறிக்கையின் இறுதியில், “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளீர்கள்.
நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான். ‘போங்க போங்க’ என்று விரட்டாமல், ‘வாங்க வாங்க’ என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும்; கட்சி நல்லா இருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P