ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் - ஜூன் 1 முதல் தலா ரூ.10 ஆயிரம் வழங்க அரசு முடிவு
அமராவதி , 15 மே (ஹி.ச.) நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 965 பேருக
A


அமராவதி , 15 மே (ஹி.ச.)

நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவி வழங்கும் வகையில் ஆந்திரப் பிரதேச அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 965 பேருக்கு ஜூன் 1-ந் தேதி முதல் மாதந்தோறும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

கிராம மற்றும் வார்டு செயலக ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு சிறுநீரகம், கல்லீரல், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்திருந்தனர்.

தொழுநோய் மற்றும் பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 965 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.93.34 லட்சம் செலவாகும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இனிமேல் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்தவுடன், மருத்துவத்துறை அனுமதியின் பேரில் அதே மாதத்திலேயே ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பக்கவாதத்தால் படுக்கையிலேயே உள்ளவர்கள், தசை பலவீனம், தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, கடுமையான ஹீமோபீலியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் கீழ் மத்திய அரசு அண்மையில் சேர்த்துள்ளது.

இந்த பிரிவின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் 2025 மார்ச் மாதத்திற்குப் பிறகு 1,217 பேர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு ‘சதரம்’ சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும் என்றும், சான்றிதழ் வழங்கப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா மற்றும் ஹீமோபீலியா நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

அதேசமயம், பக்கவாதத்தால் முழுமையாக படுக்கையிலேயே உள்ளவர்கள் மற்றும் கடுமையான தசை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய பயனாளிகளிடமிருந்து ஜூன் மாதம் முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA