சென்னையில் குப்பைக் கழிவுகளை முழுமையாக அகற்ற குழு அமைத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, 15 மே (ஹி.ச.) சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2 ஆயிரம் விசைப் படகுகள், 7,700 பைபர் படகுகள், 500 கட்டுமரங்கள் என சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கி
Chennai


சென்னை, 15 மே (ஹி.ச.)

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2 ஆயிரம் விசைப் படகுகள், 7,700 பைபர் படகுகள், 500 கட்டுமரங்கள் என சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கிழக்கு கடற்கரையின் பகுதிகள் சமீப காலமாக பிளாஸ்டிக் குப்பைகள், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் தேங்கி குப்பை தீவுகளாக மாறியுள்ளன.

இதனால் வடசென்னையின் கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாளிதழ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில் நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில், மீனவர் நலத் துறை இயக்குநர், சென்னை துறைமுகப் பொறுப்பு கழக தலைவர், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாளர் ஆகியோர் அடங்கிய தூய்மைப் பணிக்கான கூட்டுக்குழு அமைத்து உத்தரவிட்டது.

எண்ணூர், காசிமேடு மட்டுமல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை கடற்கரை பகுதி முழுவதும் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை மீன்பிடி தடை காலம் முடிவடையும் ஜூன் 14 ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை துறைமுக வளாகத்திற்குள்ளாகவோ, கடற்கரை பகுதிகளிலோ குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் தெர்மாகோல் பெட்டிகள் விடப்படுவதைத் தவிர்க்க. சூரிய சக்தியால் இயங்கும் குளிரூட்டப்பட்ட மீன்வைப்பு அறைகளை மீனவர்களுக்கு கட்டித் தர வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 3 ம் தேதிக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தள்ளி வைத்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN