Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
சென்னை, மயிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச் சாலையில் 14 கிரவுண்ட் நிலத்தில் வலி நிவாரணிகளை தயாரிக்கும் 'அம்ருதாஞ்சன்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த 14 கிரவுண்ட் நிலம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது.
1901 இல் 99 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,400 வாடகை என்கிற குத்தகையின் அடிப்படையில் கோயில் நிர்வாகம் நிலத்தை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குத்தகை காலம் 2001 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டதால், வாடகை தொகையை மாதம் ரூ. 3.3 லட்சமாக நிர்ணயித்து, இந்து சமய அறநிலையத் துறை கடந்த செப்டம்பர் 17, 2021-ல் அறிவித்தது. இதை எதிர்த்து, அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அம்ருதாஞ்சன்.
நிறுவனத்தை வெளியேற்றவும், நவம்பர் 1, 2001 முதல் உள்ள வாடகை பாக்கியை வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 99 ஆண்டுகளுக்கு மாத வாடகை ரூ. 1,400 செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குத்தகை எடுத்தவர் அந்த நிலத்தை அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு குத்தகை மாற்றம் செய்துள்ளார். ஆனால், அந்த வாடகையை மனுதாரர் தரப்பில் செலுத்தவில்லை.
குத்தகை காலம் முடிந்த பின்னரும் நிலத்தை காலி செய்யவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இந்த மனு நிலுவையில் இருந்தபோதும், அம்ருதாஞ்சன் நிறுவனம் வாடகை பாக்கியை தராமல் இழுத்தடித்துள்ளது. கோயிலின் நற்பணிகளுக்கு குத்தகை வருமானத்தை நம்பியே கோயில் நிர்வாகங்கள் நம்பி உள்ளன என தெரிவித்து அம்ருதாஞ்சன் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
இருப்பினும் விடாப்பிடியாக, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அம்ருதாஞ்சன் நிறுவனம் மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்தது. அதில், கோயில் நிலத்தில் இருக்கும் மற்றொரு தரப்பினர், பேச்சுவார்த்தை மூலம் வாடகை நிர்ணயத்தை மாற்றி அமைத்துள்ளனர். அதுபோலவே எங்களது நிறுவனத்துக்கும் சலுகை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு வழங்கிய, இடத்தை காலி செய்ய வேண்டும் என்கிற உத்தரவில், மறு ஆய்வு செய்வதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN