சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு!
சென்னை, 15 மே (ஹி.ச.) உலக நாடுகளிடையே அதிகளவில் தங்கத்தை பயன்படுத்துகிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஆனால், அதில் 80% வெளிநாடுகளில் இருந்து தான் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற
Chennai International Airport


சென்னை, 15 மே (ஹி.ச.)

உலக நாடுகளிடையே அதிகளவில் தங்கத்தை பயன்படுத்துகிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஆனால், அதில் 80% வெளிநாடுகளில் இருந்து தான் இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இந்திய அரசு வரி விதிக்கும் நடைமுறைகளை கொண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பில் 15 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும் என இந்திய அரசு உயர்த்தியது.

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் துபாய், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கமானது இந்தியாவிற்கு கடத்தல் முறையில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் கடத்தல் தங்கங்கள் பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்தன. மேலும் வேலையில்லா பட்டதாரிகள் பலர் தங்க கடத்தல் குருவிகளாக செயல்படத் தொடங்கினர்.

எனவே, தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதை கட்டுப்படுத்த, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீமாக இந்திய அரசு குறைத்தது. இதன் காரணமாக, விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவது குறைந்தது.

இந்நிலையில், தற்போது இந்திய அரசின் நிதி அமைச்சகம் திடீரென தங்கத்திற்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விமான நிலையங்களில் தங்க கடத்தல் மற்றும், ஹவாலா பணம் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனால், சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் வருகை புறப்பாடு பகுதிகளில் சுங்கச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆணையர், சுங்கத் துறை துணை ஆணையர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 10-க்கும் மேற்பட்ட சுங்கத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 20 சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களோடு, சுங்கத்துறை ஏர் இண்டெஜிலென்ட் என்ற அமைப்பின் துணை ஆணையர் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், 2 ஆய்வாளர்கள் உட்பட 15 சுங்கத் துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தங்க கடத்தல் சம்பவத்தில் பெண்களும் அதிக அளவில் ஈடுபடுவார்கள் என்பதால் சுங்கத்துறை சோதனை பிரிவில் பெண் அதிகாரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளிடமும் உள்நாட்டு பயணிகளிடமும் தங்கம் மற்றும் ஹவாலா பணம் எதாவது இருக்கிறதா என தீவிரமாக சோதனை நடத்தி பிறகே பயணிகளை விமான நிலையத்திற்குள் மற்ற சோதனைக்கு அனுமதிக்கின்றனர். குறிப்பாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துவரும் பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தியும் விசாரணை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN