நகைக்காக மூதாட்டி கொலை - போலீஸ் விசாரணை
சென்னை, 15 மே (ஹி.ச.) சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெருவில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பொன்னம்மாள் (70) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்மாளுக்கு ஆறு மகள்கள் உள்ளனர். அனைவர
கொலை


சென்னை, 15 மே (ஹி.ச.)

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெருவில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பொன்னம்மாள் (70) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னம்மாளுக்கு ஆறு மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அவரது வீட்டிற்கு ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சிறிது நேரம் வீட்டுக்குள் இருந்துவிட்டு அதே ஆட்டோவில் அவசரமாக சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் கைகள் துணியால் கட்டப்பட்டு, முகம் மற்றும் கண் பகுதியில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்ட நிலையில், பரிசோதித்த செவிலியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதூர் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததுடன், பொன்னம்மாள் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே பொன்னம்மாளுக்கு சொந்தமான சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் செய்யப்பட்டதாகவும், அதற்கான முன்பணத்தில் ஆறு மகள்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கியதாகவும், மீதத் தொகையை அவர் வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது கொள்ளைக்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஆட்டோவில் வந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P