கடலூரில் 454 பள்ளி வாகனங்கள் ஆய்வு – பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கடலூர், 15 மே (ஹி.ச.) கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சொந்தமான பள்ளி பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெள்ளிக்கிழமை
பள்ளி


கடலூர், 15 மே (ஹி.ச.)

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சொந்தமான பள்ளி பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 454 பள்ளி வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

ஆய்வின்போது பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறதா, முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், வாகனங்கள் முறையான தகுதிச்சான்று பெற்றுள்ளனவா, விபத்து நேரங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற அவசர வழி வசதி உள்ளதா, மாணவர்கள் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டுவதைத் தடுக்க பாதுகாப்பு கம்பிகள் சரியான இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.

அத்துடன், டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா, கதவுகளுக்கு பாதுகாப்பு பூட்டுகள் உள்ளனவா, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதுபோன்ற வாகன பாதுகாப்பு ஆய்வுகள் மாவட்டத்தின் மேலும் இரண்டு இடங்களில் நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam