ஆற்காடு அருகே அரசு டவுன் பஸ் தீப்பிடித்து எரிந்தது - 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
ராணிப்பேட்டை, 15 மே (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் பயணம் செய்த 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக
தீ விபத்து


ராணிப்பேட்டை, 15 மே (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் பயணம் செய்த 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு தடம் எண் 37 என்ற மகளிர் விடியல் பயணம் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

பேருந்து சக்கரமல்லூர் கிராமம் அண்ணாநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி, பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பயணிகள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கினர். அடுத்த சில நொடிகளில் பேருந்தின் முன்பகுதியில் தீப்பிடித்து வேகமாக பரவத் தொடங்கியது. தகவலறிந்து ஆற்காடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அதற்குள் அரசு பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam