குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கோலாகலம்
வேலூர், 15 மே (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலின் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்த
சிரசு வழிபாடு


வேலூர், 15 மே (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலின் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் கெளடண்யா மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாளில் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவை தொடர்ந்து இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் குடியாத்தம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

சிரசை தரிசிக்க வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்தனர். பலர் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் சூரத் தேங்காய் உடைத்தும், புலியாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருவிழாவை முன்னிட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து

1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam