Enter your Email Address to subscribe to our newsletters

தர்மசாலா , 15 மே (ஹி.ச.)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
அந்த அணியின் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களிலும், கூப்பர் கானொலி 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அஸ்மதுல்லா ஒமர்சாய் 38 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்ற பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 57 ரன்கள் சேர்த்தார்.
இறுதி கட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் களமிறங்கினர்.
அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பின்னர் நமன் திர் 9 ரன்களிலும், ரோகித் சர்மா 25 ரன்களிலும், ரதர்போர்ட் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அப்போது அணியின் வெற்றிக்காக பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா அதிரடியாக ரன்கள் குவித்தார்.
வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், பஞ்சாப் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
மறுமுனையில் வில் ஜாக்ஸும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மும்பை அணியின் ரன்வேகம் அதிகரித்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா - வில் ஜாக்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முடிவில் திலக் வர்மா 33 பந்துகளில் 75 ரன்களும், வில் ஜாக்ஸ் 10 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் அணியின் சார்பில் ஒமர்சாய் 2 விக்கெட்டுகளும், மார்கோ யான்சன் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA