பெட்ரோல் டீசல் விலை உயர்வு,மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியே காரணம் - டி.கே. சிவகுமார்
சென்னை, 15 மே (ஹி.ச.) கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார், இன்று (மே 15) தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்தினரு
DK Shivakumar


சென்னை, 15 மே (ஹி.ச.)

கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார், இன்று (மே 15) தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வருகை தந்தார்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது ஒரு தனிப்பட்ட நபரின் தவறு அல்ல. மாறாக மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்வியே இதற்கு காரணம். அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேணத் தவறியதே இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து உள்ளது.

பொதுமக்கள் வாகன பயன்பாட்டைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். நடைமுறையில் இது சாத்தியமற்றது. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், அரசுப் பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்தால் மட்டுமே நேரத்தின் முக்கியத்துவத்தையும், மக்களின் சிரமங்களையும் அவர்களால் உணர முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எரிபொருள் விலை உயர்வு மற்றும் தங்கம் விலை உயர்வு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இருந்ததை விட பல மடங்கு தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது. எனவே, சாமானியர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறி உள்ளது.

கோவிட் காலத்தில் விளக்கேற்றச் சொன்னது போன்ற தேவையற்ற அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் பணத்தைச் சேமிக்கவும் முறையான தேசியக் கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இத்துடன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது கட்சித் தலைமையின் முடிவு. மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி உயர்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2.83 அதிகரித்து ரூ. 103.67க்கும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2.86 உயர்ந்து ரூ. 95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN