நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்- சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 43 எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள் மீது வழக்கு
சென்னை, 15 மே (ஹி.ச.) நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போ
Neet


சென்னை, 15 மே (ஹி.ச.)

நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் இயக்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் SFI நிர்வாகிகள் கலந்து கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக சாஸ்திரி பவன் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட SFI நிர்வாகிகள் ஆனந்த், தமிழ், கமலேஷ் உள்ளிட்ட 43 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூடுதல் மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P