Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 மே (ஹி.ச.)
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேற்பார்வை குழுவிற்கு உதவியாக துணைக் குழு அமைக்கப்பட்டது.
அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குநர் கிரிதரன் தலைமையிலான இந்த துணைக் குழுவில், தமிழகம் சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரும், கேரளம் சார்பாக எர்ணாகுளம் மத்திய வட்ட நீர்ப்பாசன பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கோஷி, கட்டப்பனை, நீர்ப்பாசன துணை பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர் லெவின்ஸ் பாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த துணைக் கண்காணிப்பு குழுவினர் ஏற்கனவே கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, துணைக் குழுவினர் மீண்டும் நேற்று (மே 14) காலை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான முல்லைக்கொடி, தன்னிக்குடி, மலைக்கரடு உள்ளிட்ட பகுதிகளிலும், முல்லைக்கொடி பகுதியில் அமைந்துள்ள மழைப்பொழிவு நிலையத்தையும் நேரில் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்விற்காக அவர்கள் கேரள மாநிலம் தேக்கடி பகுதியில் அமைந்துள்ள படகுத்துறையில் இருந்து படகுகளின் மூலமாக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
அங்கு பிரதான அணை, சிற்றணை (பேபி டேம்), மண் அணை, அணை நீர்வரத்து, நீர்க்கசிவு (சிப்பேஜ் வாட்டர்), மதகுகளின் இயக்கம், கேலரி பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் பேபி அணையை பலப்படுத்தற்கான வழி வகைகள், வள்ளக்கடவு முதல் பெரியாறு அணை வரையுள்ள வாகன பாதையை சீரமைக்கும் பணிகள் குறித்து தமிழக அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் நிகழ்வுகள் மற்றும் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையை முதன்மை கண்காணிப்பு குழுவிற்கு ஆய்வுக் குழுவினர் அனுப்பி வைக்கவுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN