பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவசியம் – தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்
சென்னை, 15 மே (ஹி.ச.) நாடு முழுவதும் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ₹3 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு அவசியமானது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் கே
Pet


சென்னை, 15 மே (ஹி.ச.)

நாடு முழுவதும் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ₹3 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு அவசியமானது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவர் கே.பி. முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த நான்கு ஆண்டுகளாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 முதல் 110 டாலர் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், உலக நாடுகள் உடனடியாக எரிபொருள் விலையை உயர்த்தியிருந்தாலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதக்கணக்கில் இழப்பைச் சந்தித்தபடியே பழைய விலையிலேயே விற்பனை செய்ததாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய ₹3 விலை உயர்வு கூட எண்ணெய் நிறுவனங்களின் முழு இழப்பை ஈடுசெய்யாது என்றும், பொதுமக்களுக்கு கூடுதல் பணவீக்கச் சுமை ஏற்படாத வகையில் குறைந்த அளவிலேயே உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர்கள் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது. விலை உயர்வால் பெட்ரோல் நிலையங்களில் செயல்பாட்டு மூலதனத் தேவை அதிகரித்துள்ளதாகவும், சிறு மற்றும் நடுத்தர நிலையங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மூன்று வாரங்களாக பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீரற்ற நிலையில் இருப்பதாகவும், கோரிக்கைக்கு ஏற்ப எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, விற்பனையாளர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் விநியோகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், சில்லறை விற்பனையாளர்களுக்கான கூடுதல் செயல்பாட்டு மூலதன உதவியை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ