பெட்ரோல், டீசல் டீலர்களின் கூடுதல் மூலதனச் சுமையை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
சென்னை, 15 மே (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வளைகுடா போரின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர்கள் கடுமையான நிதி மற்றும் விநியோக சிக்கல
பெட்ரோல்


சென்னை, 15 மே (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வளைகுடா போரின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர்கள் கடுமையான நிதி மற்றும் விநியோக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் க.ப. முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி, அதன் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் விலைக்கும் விற்பனை செய்யும் விலைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உருவாகி நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் செய்யப்பட்டுள்ள விலை உயர்வு கூட எண்ணெய் நிறுவனங்களின் முழு இழப்பையும் ஈடுசெய்யக்கூடியதல்ல என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையாளர்கள் தற்போது இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் தினசரி விற்பனையைத் தொடர டீலர்கள் கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் நிதிசுமையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த மூன்று வாரங்களாக டீலர்கள் கோரும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இந்தத் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் தினசரி விற்பனையை தடையின்றி நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

எனவே, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டீலர்களின் கூடுதல் மூலதனச் சுமையை குறைக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam