Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 மே (ஹி.ச.)
மதுராந்தகம் மற்றும் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில், நீண்ட நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்ததால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மதுராந்தகம், செய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
தொடர்ந்து திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அருகிலிருந்த கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மழை பெய்துக் கொண்டிருந்தபோது பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சில இடங்களில் மின்சார தடையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய வானிலை நிலவரத்தால் “இது கோடைகாலமா அல்லது குளிர்காலமா?” என்ற கேள்வி எழும் வகையில் சூழல் நிலவி வருகிறது. பலத்த மழையால் நீர் தேங்கி ஓடிய நிலையில், விவசாய பணிகளுக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam