ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் லட்டு விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடி - 6 பேர் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம், 15 மே (ஹி.ச.) ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பேஷ்கார் உள்பட ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து கோயில் இணை ஆணையர்
ராமேஸ்வரம்


ராமேஸ்வரம், 15 மே (ஹி.ச.)

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பேஷ்கார் உள்பட ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதசுவாமி கோயிலில் 2019ஆம் ஆண்டு முதல் கோயில் பிரசாத விற்பனையை கோயில் நிர்வாகமே நேரடியாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், 2023-24 நிதியாண்டில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் மூலம் தினமும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், கோயிலின் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனை பொறுப்பில் இருந்த இளநிலை உதவியாளர் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்), பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய லட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து, அவற்றை விற்பனை கவுண்டர்களில் முறைகேடாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, லட்டு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சமூர்த்தி தலைமையில் சில ஊழியர்கள் வெளியில் இருந்து லட்டு தயாரிப்பு மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி, முறைகேடாக லட்டு தயாரித்து கவுண்டர்களில் விற்பனை செய்தது உறுதியானது.

மேலும், 2023ஆம் ஆண்டு முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக தயாரித்து பக்தர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடையதாக இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்), லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி மற்றும் தூர்வை பணியாளர் விக்ரம் ஆகிய ஆறு பேரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் கோடிக்கணக்கில் பிரசாத மோசடி நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam