Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 15 மே (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில், இலங்கைக்கு படகுமூலம் கடத்திச் செல்லும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ பீடி இலை பண்டல்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபத்தை ஒட்டியுள்ள தீவுப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பீடி இலை, மஞ்சள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கமான ரோந்து பணியின் போது முயல் தீவு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சில மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக அவற்றை கைப்பற்றி சோதனை செய்தபோது, அவற்றில் மொத்தம் 350 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்கள் மண்டபம் சுங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இந்த பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்திச் செல்லும் நோக்கில் முயல் தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடையவர்கள் யார், பீடி இலைகளை தீவில் பதுக்கி வைத்தது யார், அவற்றை இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது யார் என்பது குறித்து சுங்கத் துறையினரும் இந்திய கடலோர காவல் படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர். இந்த பறிமுதல் நடவடிக்கை கடத்தல் கும்பல்களுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN